வெள்ளி, 14 அக்டோபர், 2016

அஷ்டகர்மம் செயல்படும் விதம்

ஒவ்வொரு திசைக்கும் மூலைக்கும் ஒருவித சக்தி உண்டு. இது விஞ்ஞானமும் மெய்ஞானியரும் ஒத்துக்கொண்ட விஷயம். திசைகளுக்கு ஒரு குணம் உண்டு. அதேபோல் மூலிகைகளில் பலநூறு இந்தாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தன்மை படைத்தது . அதேபோல் மந்திர ஒலிகளிலும் ஒவ்வொரு ஒலியும் ஒவ்வொரு தன்மையை வெளிப்படுத்தும் குணம் கொண்டது. 
 
மரங்களை எடுத்துக்கொண்டாலும், தானியங்களை எடுத்துக் கொண்டாலும், இரவு பகல் என்ற நேரத்தை எடுத்துக் கொண்டாலும்,  வண்ணங்களை எடுத்துக் கொண்டாலும், ஒவ்வொரு கிழமை, திதி, தெய்வம் இவைகளை எடுத்துக் கொண்டாலும் ஒவ்வொன்றிலும் பல வித்தியாசமான சத்திகளும் தன்மைகளும் இருக்கும்.

இதை கண்டுணர்ந்த நம் மெய்ஞானியர் இவைகளை எட்டு வகையான தந்திர செயலுக்கு (அஷ்டகர்மம்) வகை பிரித்தனர். ஒவ்வொரு செயலுக்கும் பொருந்தக்கூடிய குணஅம்சம் கொண்டவைகளையும் ஒத்துழைப்பு தருவதையும் பிரித்து பயன்படுத்தினர். கூடுதலாக மன ஆற்றல் சக்தியும் பெற்று அதை செலவிட்டு பயன்கொண்டனர். இந்த வகையில் தான் அஷ்டகர்மம் செயல்படுத்த கையாளப்பட்டது. இதை சற்று விரிவாக காண்போம். 
 
திசைகள் மற்றும் மூலைகள் அறிக
 
பூமி ஆகாயம் எனும் பிரபஞ்சத்தில் என்திசை இருப்பதை யாவரும் அறிந்ததே. பூமியில் படுத்து ஆகாயத்தை தன் முகம் நோக்கி படுத்துறங்குபவருக்கு ஒருவகையான குணம் இருக்கும். உறங்கும் போதும், உறங்கி விழிக்கும் போதும் அதிகமாக அந்தந்த திசையின் குணம் தான் ஒவ்வொருவருக்கும் இருக்கும். 
 
மூலை திக்குகள் இரண்டும் கெட்டான் என்பார்கள். அதாவது இரு பக்க சந்திப்பு கொண்டவையே மூலை திக்குகள் அல்லவா? அதற்கு கூடுதலாக சில சேர்ப்பு சக்திகள் கலந்திருக்கும். ஒரு மருந்தை இன்னொரு தன்மை கொண்ட மருந்தை கலந்தால் ஒருவித புது மருந்து உண்டாகுமல்லவா? அதைப்போல மூல திக்குகளுக்கு இரட்டிப்பு தன்மை சேர்ந்து புது சக்தி இருக்கும். ஆக ஒவ்வொரு திக்கிற்கும் ஒவ்வொரு தன்மையுள்ளதை சுருக்கமாக புரிந்துகொள்ளுங்கள் போதும். 
 
அடுத்தபடியாக மூலிகைகளை பார்ப்போம்.
 
 சில மூலிகைகள் யார் சாப்பிட்டாலும் எந்த வயதினர் பயன்படுத்தினாலும் நன்மை மட்டுமே செய்யும். பல மூலிகைகள் விஷத்தை ஏற்படுத்துவதாகவும், விஷத்தை முறிப்பதாகவும், வலிமை மற்றும் வீரியத்தை தருவதாகவும் இருக்கும் . இந்த மூலிகைகளில் நீர், நெருப்பு போன்ற பஞ்சபூத சக்திகளின் ஆளுகை இருக்கும். அதாவது உஷ்ணம், குளுமை, வாயு, மயக்கம் தருவதாகவும் இருக்கும், இவைகளை எதுவுமே வெளிக்காட்டாமல் நல்லபடியாக பயன்பட்டு ஜீரனமாகக்கூடியதும் இருக்கும். (இதில் உஷ்ணம் என்பது நெருப்பையும், குளுமை என்பது நீரையும், வாயு என்பது காற்றையும், மயக்கம் என்பது ஆகாயத்தையும், ஜீரனம் என்பது பூமி என்றும் அறிக. இதுதான் பஞ்ச பூத ஆளுகை) இந்த மூலிகையின் காற்று பட்டால்கூட (முகர்தல்) சில மாற்றங்களை ஏற்படுத்திவிடும். ஒரு மூலிகை சக்தியோடு இன்னொரு மூலிகையை இணைக்கும் போது ஒரு புது சக்தி உண்டாகும். இது நல்லதும் உண்டு, தீயதும் உண்டு. மூலிகைகள் மருத்துவத்திற்கு மட்டுமல்ல குணத்தை மாற்றக் கூடிய சக்தியும் உண்டு. ஆக மூலிகைகளுக்கு பேதகம் இருந்திருப்பதை அறிந்திருப்பீர். இதையும் சுருக்கமாக புரிந்துகொள்ளவே கொடுத்துள்ளேன். 
 
அடுத்தது மந்திர ஒளிகள் பற்றி சுருங்க அறிக : 
 
ஒவ்வொரு ஓசை எழுப்பக்கூடியதும் ஒலியை உண்டாக்குகின்றன. இதற்கு மொழி ஒரு தடையில்லை. உள்ளுக்குள்ளேயே கூறினாலும் வெளிப்படையாக கூறினாலும் ஒரு சொல்லின் அர்த்தம் ஒன்றுதான் என்றாலும் தன்மைகள் வேறாகும். ஓம் என்ற ஒரு மந்திரத்தை வெளியாட்களுக்கும் கேட்கும்படி சொல்லிப்பாருங்கள் சத்தமாக தொண்டை பகுதியே அதிகம் அழுத்தம் கொண்டு ஓசை வெளிப்படும். இதையே மனதிற்குள்ளேயே மிக சத்தமாக சொல்லிப்பாருங்கள். அடிவயிறு பகுதி அதிகம் அழுத்தம் கொண்டு ஓசை வெளிப்படும். இரண்டின் ஓசையின் அர்த்தம் ஒன்றுதான் என்றாலும் ஓசையின் தாக்கம் உடனே மாறுபடுத்தும் என்பதே உண்மை. சாதாரணமாக ஒருவரோடு பேசும்போது தொண்டையில் இருந்துதான் பேசுவோம். ஒருவரை ஆசிர்வாதிக்கும் போது நம்மிடம் ஆசி பெறுபவர்மீது பாசம் இருந்தால் மார்பு மற்றும் தொண்டையில் சிறு அழுத்தத்தோடு ஆசியை வெளிப்படுத்துவோம். இதுவே ஒருவரை சபிக்க முற்படும் போது ஒருவித ஆவேச உணர்வோடு இருப்போம். அப்போது வெளிப்படுத்தும் ஓசையாகப்பட்டது அடிவயிற்றில் இருந்து புறப்பட்டு ஓசை வெளியே வரும். சாபம் உடனே அரங்கேற காரணம் இதுதான்.

வாசி பயிற்சியில்லா மனிதனுக்கும் சபிக்கும் போது எல்லா சக்கரமும் தொட்டபடிதான் வார்த்தை வெளிப்படும். அதனால் வார்த்தைகள் பலித்துவிடுகின்றன. ஆசிர்வாதம் தாமதமாகத்தான் வேலை செய்யும். காரணம் சாப வெளிப்பாடுபோல் ஆசி வெளிப்பாடு இல்லாததே காரணமாகும். உணர்வு ஒருபுறம் இருந்தாலும் ஓசை புறப்படும் இடமும் அதன் வேகமும் உந்துதலும் மிக முக்கியமாகின்றது. இங்குதான் நம் ஞானிகளின் அராய்ச்சியே தொடங்கியது .

ஒரு வார்த்தை பலிக்க வேண்டுமென்றால் அடிவயிறு எனும் மூலாதார சக்கரத்தில் இருந்து தொடங்கும் வார்த்தைகள் மிக முக்கியம் என்பதை அறிந்தனர். ஓம் என்ற ஒலியில் அந்த புறப்பாடு இருப்பதை அறிந்து அதை முன்வைத்தனர். அடுத்து ஒரு வார்த்தையில் அர்த்தம் என்பதை விட அழுத்தம் மிக முக்கியம் என்பதை அறிந்தனர்.

அடுத்து மூலாதாரம் தொடங்கிய ஓசையாகப்பட்டது. ஒரே சீராக வரும்போது ஒரு தாக்கத்தையும், இதுவே தொடங்கிய இடத்திலிருந்து வாய்வழியாக வருவதற்குள் ஓசையின் அழுத்தம் பலதரப்பட்டு ஏற்ற இறக்கத்துடனோ அல்லது ஒரு சக்கராவில் சற்று கூடுதல் அழுத்தமும் இன்னொரு சக்கராவில் குறைவான அழுத்தமும் கொடுத்து வெளிப்படும்போது ஒருவித மாறுபட்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை அறிந்தனர். இந்த ஓசைகளோடு நம் எண்ண பதிவை ஆழமாக செயல்படுத்தும்போது அது நம் எண்ணச் செயலை முடித்து தருகிறது என்பதை அறிந்தனர்.

அந்த வகையில் இதை சீடர்களுக்கு  புரியவைப்பதும் உணர்த்துவதும் மிக சிரமமாக இருந்ததால் இதை வார்த்தைகளாக கூறும்போதே இச்செயல் நடந்தால்தான் என்னாலும் இக்கலை வளரும் என்று அறிந்த ஞானியர் ஒரு உபாயத்தை கண்டுபிடித்தனர். அதுதான் மந்திரமாகும். (மந்திர ஜெபம் சித்தியாக உரு 48 நாள் ஏற்றுபவர்கள் மந்திரத்தின் ஓசை ஏற்றம் இறக்கம் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். இந்த தவநாளில் வேறு வார்த்தை வாயில் இருந்து வரக்கூடாததின் காரணம் மேலேகூறிய தகவலில் புரிந்துகொள்ளலாம்.) இந்த மந்திர வார்த்தைகளை மாற்றி செபிப்பதின் மூலம் அஷ்டகர்ம செயலுக்கு பொருந்தக்கூடிய வார்த்தையாக கண்டு மந்திரமாக வெளிப்படுத்தினர்.

ஒரு வார்த்தையின் எழுத்தை இடம் மாற்றி மாற்றி எழுதி படித்து பார்த்தால் வெவ்வேறு வகையான சத்த வெளிப்பாடும் உடலின் உள்ளே அழுத்த மாறுபாடுகளும் உண்டாகும் என்பதை அறிந்து ஞானியர் வெளிப்படுத்தினர். அந்த வார்த்தைதான் மகாமந்திரம், பஞ்சாட்சர மந்திரம் என்று சொல்லப்படும் நமசிவய என்பதை அறிக.

இந்த ஐந்தெழுத்து வெளிப்படுத்தாத தாக்கத்தை வேறொரு வார்த்தை புதிதாக ஏற்படுத்திவிடாது . அதனால்தான் மந்திரங்களுக்கெல்லாம் சிறந்ததாக இந்த பஞ்ச அட்சரத்தை கூறினார்கள். இந்த வார்த்தை தான் மாற்றி மாற்றி அஷ்டகர்ம செயலுக்கு உபயோகிக்கப்படுகிறது என்பதை சுருக்கமாகஅறிக. 
 
அடுத்து மரங்களை பார்ப்போம்.
 
(விருட்சம்) மரத்தின் உறுதியை நாம் இங்கு பார்க்கப்போவதில்லை. அதன் தன்மையைத்தான் இங்கு காண வேண்டும். 
 
புளியமரத்தின் அடியில் தொடர்ந்து இளைப்பாறி வருவோமேயானால் உடலில் சூடு ஏற்படும். இதனால் உடல் இளைக்கும். கோபம் உண்டாகும். காமத்தை கட்டுப்படுத்துவது சிரமமாக இருக்கும் அல்லது விந்து இலகிப்போகும். 
 
அடுத்து வேப்பமரம் புளியமரத்திற்கு நேர்மாறானதாகும். உடல் உஷ்ணத்தை நீக்கக்கூடியதும், புத்தி தெளிவை தரக்கூடியதும் ஆகும். பித்தத்தையும் தெளியவைக்கும். அடுத்து வில்வமரம் இதன் அடியில் தினசரி இளைப்பாறுபவனுக்கு உயர்ந்த வசியங்கள், அதிஷ்டங்கள், மன இன்பங்கள் யாவும் ஏற்படும். உடலில் சூட்டையும், குளுமையையும் சமஅளவில் வைத்திருக்க உதவும். வில்வமர காற்றிற்கு மனதை வசீகரிக்கும் ஆற்றல் இயல்பாகவே உள்ளதை அறியலாம்.

அடுத்து எட்டிமரம் இதன் அடியில் தொடர்ந்து இளைப்பாறுபவன் யாராக இருந்தாலும் வெகுவிரைவில் மூளை பாதிப்பு உண்டாகும். அல்லது மற்றவரை துஷ்பிரயோகம் செய்ய வேண்டும் என்ற எண்ணமே உண்டாகும்.

அரளி செடியின் காற்று தொடர்ந்து பட்டாலோ அல்லது அதன் அடியில் இளைப்பாறினாலோ தொடர்ந்து மனிதர்களிடம் நேர்மையாக நடந்துகொள்ள முடியாது . இது அலரி செடிக்கும் பொருந்தும் .

அடுத்து அத்தி மற்றும் இலுப்பை மரங்களின் அடியில் இளைப்பாறினால் இதை தொடர்ந்து செய்தால் நம் செயல் மட்டுமல்ல மனதில் நினைக்கும் வேறொருவரின் செயலும் அங்கேயே நின்றுவிடும். மேலும் மனம் மிக அமைதியாகும் அல்லது மனம் வெருமனே ஆகும். இந்த இரு மரங்களின் அடியில் தொடர்ந்து இளைப்பாறும்போது நம் உடலில் வேறொரு சக்தி உட்புக அதிக வாய்ப்புண்டு. அதனால்தான் மோகினி, சில யட்சனி பயிற்சிகள் இந்த மர அடியில் அமர்ந்து செய்யச் சொன்னார்கள்.

இதேபோல் மா, பலா, நெல்லி, ஆல், அரசு என ஒவ்வொரு மரத்திற்கும் ஒருவித சக்தி உண்டு. இதன் அடியில் தொடர்ந்து இளைப்பாறும்போது வெவ்வேறு வகையான மாற்றங்கள் உண்டாவது உண்மை. அதற்குத்தான் சில மரங்களின் தன்மையை மட்டும் உதாரணத்திற்கு கொடுத்திருந்தேன்.

அது மட்டுமல்லாமல் நம் மனதில் என்ன எண்ணவோட்டம் ஓடுகிறதோ அதை நடத்திக் கொடுக்கும் சக்தி இந்த மரங்களுக்கும், மரத்தின் பலகையை பயன்படுத்தினாலும், இவைகளை எரித்து புகையை முகர்ந்தாலும் இந்த பலன் கிடைப்பதை நம் ஞானியர் அறிந்தனர்.
 
இதில் முக்கியமாய் அறிவது யாதெனில் எண்ணத்தின் போக்கை ஆவேசம், சாந்தம், மிதமானதுஎன்று மூன்று வகையாக பிரிக்கலாம். இந்த எண்ண வேகத்தின் அடிப்படையிலும் பலன்கள் மாறுபட்டு குறிப்பிட்ட செயலை செய்ய வைக்கிறது . ஆனால் குறிப்பிட்ட செயலுக்குரிய மந்திரங்களை  கூறும்போது மனம் தன்னால் தேவையான பிரிவுக்கு மாறுகிறது . இதையும் நினைவில் வைத்துதான் மந்திர ஒலியை உருவாக்கினார்கள்.

மந்திரத்தை எந்த செயலுக்கு என தேர்ந்தெடுத்து பயன்படுத்துவதுபோல கூடவே அந்த செயலுக்கு ஒத்துப்போகும் மர பலகையும் (ஆசனம்) ஓமத்திற்கு அதே வகை குச்சியும் பயன்படுத்தினால் கூடுதல் நன்மையான, விரைவான பலனும் கிடைப்பதை அறிந்தனர்.

ஆடைகளில் கூட ஒவ்வொரு வண்ணத்திற்கு ஒரு தன்மை உண்டு. ஒரு வண்ணத்தைப் பார்த்தால் சாந்தம் கிடைக்கும். இன்னொரு வண்ணத்தைப் பார்த்தால் வேகம் உண்டாகும். இன்னொரு வண்ணத்தை அணிந்தாலோ பார்த்தாலோ மனம் சுறுசுறுப்படையும். சாந்தம் கிடைக்கும். சில வண்ணங்கள் உடலை அடக்கி மனதை வக்ரமாக்கும்.   இதையும் அறிந்த ஞானியர் செயலுக்கு தகுந்தவாறு வகைப்படுத்தினர்.

வடிவங்கள் தெய்வ ரூபங்கள் கூட ஒவ்வொன்றைப் பார்க்கும்போது ஒவ்வொரு மாற்றமான மன வெளிப்பாட்டை உண்டாக்கும். இவைகளையெல்லாம் செயலுக்கு தகுந்தவாறு வகை பிரித்து உண்டானதுதான் அஷ்டகர்ம வசியங்கள்.

இவைகளையெல்லாம் ரகம் பிரித்து நம் ஞானியர் நமக்கு கொடுத்து சென்றாலும் இவைகளை செயல்படுத்த நம் மனமே முக்கியமாக தகுதியுடன் அமையவேண்டும். ஏனெனில் மன ஆற்றல் இருந்தால்தான் அஷ்டவகை செயல்களை பிறருக்கு ஏவி விட முடியும். சுயமாக நமக்கே பயன்படுத்தú வண்டுமானாலும் வேறு பாதிப்பு வராமல் இருக்க மனப்பயிற்சி மிக முக்கியமாகும்.
 
நீங்கள் இந்த எட்டு வகை செயலையும் கற்று பிறருக்கு உதவிக்காக பயன்படுத்தப்போகிறீர்கள் என்றால் மிகமிக கவனமாக செயல்படவேண்டும். ஏனெனில் சில மர ஆசனங்களில் அமரும்போது நம் புத்தியைக் கூட கெடுத்துவிடும்.

எனவே ஆரம்பத்தில் தெய்வ அருள் பெறவேண்டிய மந்திரங்களை நன்கு பயின்று அதன்மூலம் இறைவனிடம் வரம்  வாங்கிய பிறகு இதை தொழிலாக செய்ய  முற்படுங்கள். 
 
தெய்வ வரம் பெறாமல் எந்த செயலையும் உங்களுக்கோ பிறருக்கோ செய்யாதீர்கள். இல்லையெனில் இந்த அஷ்ட கலை  தொட்டவனைக் கெடுத்துவிடும் கவனம். இந்த அஷ்டகர்ம மந்திரம் மற்றும் வடிவம் மற்றும் எந்த செயலுக்கு அட்சரத்தை திருப்பிப்போடவேண்டும் என்பதை தகட்டில் யந்திரமாக்கினார்கள். இந்த அஷ்ட கர்ம யந்திரத்தை பொருத்தமட்டில் ஒரு வரைபடம் அல்லது சூத்திரம் என்றே கருதவேண்டும்.

இந்த அஷ்டகர்ம பொதுவான தகவலை சொல்லிவிட்டேன். இந்த யந்திரத்தை மட்டும் சொல்ல இயலாது . இன்றைக்கு அஷ்டகர்மத்திற்கும் யந்திரம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பல புத்தகத்திலும் வரைந்து கொடுத்துள்ளார்கள். எல்லாமே தவறு மாற்றி, மாற்றி குழப்பி வைத்து சித்தர்கள் கொடுத்ததை இவர்கள் மேலும் குழப்பிவிட்டார்கள். இது மாபெரும் தவறு. அஷ்டகர்ம அவயங்களை முறையாக கையாளாவிட்டால் சிறு தவறும் நம்மை பாதித்துவிடும்.

காரணம் இந்த அஷ்டகர்ம செயல் விதி எனும் நவக்கிரகத்திற்கும், தேவர்களுக்கும் எதிரானது. கொஞ்சம் பிசகினாலும் எல்லாம் இழந்து பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளிவிடும். பரதேசியாக்கிவிடும்.
 
  கலைகளை அறியும் அவசர குணம் உள்ளவர்கள் விளையாட்டாக இதை செய்து பார்த்து வினையை தேடிக்கொள்ளக்கூடாது என்பதற்காக இதில் அஷ்டகர்மத்தைப் பற்றிய செயல்முறைகள் கொடுக்க விரும்பவில்லை . பொதுவாக நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக கொடுத்திருக்கிறேன்.   இதை குறையாக நிறுத்தியதற்காக தயவுசெய்து மன்னிக்கவும்.

பஞ்ச பட்சி வித்தையோடு அஷ்டகர்ம வித்தையை இணைத்தால் எல்லாம் வெல்லலாம். ஆனால் சிவகட்டளைக்கு கட்டுப்பட்டு சில நேரங்களில் சில சந்தர்ப்பங்களில் விதியை மீறக்கூடாது . விதியை மீற வேண்டிய இக்கட்டில் இக்கலையை  பயன்படுத்தலாம்.

ஒரு எச்சரிக்கை எக்காரணம் கொண்டும் உங்களுக்காக அஷ்ட கர்மத்தை பயன்படுத்திக்கொள்ளக்கூடாது. பிறருக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஜாதகமும் அப்படித்தான். அருள்வாக்கும் அப்படித்தான். உங்களுக்காக நீங்களே பார்த்துக்கொள்ளக்கூடாது. வாக்குசித்தியை இழந்துவிடுவீர். உங்கள் குடும்பத்தாருக்கு கூறலாம் தவறில்லை.

நாம் பயன்படுத்தும் நட்சத்திரத்திற்குரிய பெயர் எழுத்துகள் முழுக்க முழுக்க பஞ்சபட்சியும் ஜோதிடமும் இணைந்தது . இதை பிரித்து ரகசியம் அறியாமல் அப்படியே பயன்படுத்துகிறோம். அதனால்தான் பலர் இன்னலான வாழ்வை வாழ்கிறார்கள்.

ஒரு நட்சத்திரத்தில் பிறந்தவனுக்கு பல எழுத்தில் பெயர் வைக்க பொதுவாக கொடுக்கப்பட்டுள்ளது . இதில் தவறில்லை என்றாலும் எடுத்து கையாளும் விதம் தவறாக உள்ளது. ஒருவனுடைய லக்கணம் மற்றும் தொழில் எதிர்கால நடவடிக்கையை கவனித்து பார்த்துதான் இந்த ஒலியில் பெயர் அமைக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். மற்றபடி மேலோட்டமாக கொடுக்கப்பட்டுள்ள எழுத்துக்கள் பொதுவான அடையாள குறியீடேயாகும். அதில் முழு அதிஷ்டம் என்பது மேலே சொன்னவாறு பார்த்து அமைப்பதில் தான் உள்ளது.
 
இதை இங்கு சம்மந்தம் இல்லாமல் கூறுவதாக எண்ண வேண்டாம். அஷ்டகர்ம கலை, பஞ்சபட்சி கலை, ஜோதிட கலை இவை மூன்றும் நெருங்கிய சம்மந்தம் கொண்டது. .

அஷ்டகலை சிவனுக்குரியது, பஞ்சபட்சி கலை விஷ்ணுக்குரியது, ஜோதிடக்கலை பிரம்மாவிற்குரியதுமூன்றும் இணைந்தால்தான் சக்தி எனும் வெற்றிக்கலையை பெறமுடியும்.
 

2 கருத்துகள்: