வெள்ளி, 14 அக்டோபர், 2016

தீட்சை தரும் குரு என்பவர்...


தீட்சை தரும் குரு என்பவர் சில தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். 


நிலையற்ற இந்த உலகத்திலிருந்து விடுபடுவதாகிய மோட்சத்தையே இந்து சாஸ்திரங்கள் வாழ்க்கையின் அறுதி லட்சியம் என்கின்றன. துன்பங்களிலிருந்து முற்றிலுமாக விடுபட வேண்டும், எப்போதும் ஆனந்தத்தில் திளைத்திருக்க வேண்டும் என்றே மனிதன் விரும்புகிறான். இதனை ஆன்மீக வாழ்க்கை மட்டுமே அளிக்க முடியும். ஆன்மீக வாழ்க்கை என்பது கடவுளை மட்டுமே சார்ந்து வாழும் வாழ்க்கை. இதன் பொருள், கடவுளை அறிந்த மகானால் மட்டுமே இத்தகைய வாழ்க்கை வாழ முடியும் என்பது தான். இறை உணர்வை அளித்து மோட்சத்தை தரும் ஆன்மீக வாழ்க்கையை யோகம் என்று அழைக்கிறோம். சாண்டில்யர் மற்றும் நாரதரால் விளக்கப்பட்ட மான பக்தி யோகம் என்ற யோகமே கலியுகத்திற்கு சிறந்தது என்று ஸ்ரீராம கிருஷ்ணர் கூறுகிறார். எந்த தெய்வத்தையும் தியானிப்பதன் மூலமும் நாம் இறைக்காட்சியை பெற்று முடிவில் மோட்சத்தை பெற முடியும் என்று பக்தி யோகம் கூறுகிறது. எந்த தெய்வத்தை தியானிக்க விரும்புகிறோமே அதனை இஷ்ட தெய்வம் என்கிறோம். இது ஒருவரின் குலதெய்வமாகவும் இருக்கலாம். அல்லது வேறெந்த தெய்வமாகவும் இருக்கலாம். இதே போல் ஜபம் மற்றும் தியானம் செய்வதற்கு ஒரு தகுதியான குருவிடமிருந்து தீட்சை பெறுவது அவசியம்.

மந்திர ஜபத்தின் முக்கியத்துவம்

 ஜபம் செய்ய செய்ய மந்திரம் மேலும் மேலும் நல்ல பலனை அளிக்கும். ஜபம் மூன்று வகையானது. சத்தமாக ஜபம் செய்வது 'வாசிக ஜபம்'அல்லது உச்ச ஜபம். மெல்லிய குரலில் செய்வது உபாம்சு ஜபம். மனத்திற்குள்ளேயே செய்வது மானச ஜபம். இதில் மானச ஜபம் மிகுந்த பலனை தருவதாகும். ஜபம் செய்யும் போது எண்ணிக்கையை விரல்களினாலோ அல்லது ஜபமாலையினாலே செய்யலாம். 10,12,28,32 அல்லது 108 முறை ஜபம் செய்யலாம். இதில் 108 என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மனிதன் ஒரு நாளில் 21,600 முறை மூச்சு விடுகிறான். தூக்கத்திற்காகவும், உடலைப் பேணுவதற்கான காரியங்களுக்காகவும் அதில் பாதியைக் கழித்தால் உணர்வுடன் வேலை செய்யும் போது10800 முறை மூச்சு விடுகிறான். 108 என்பது இதையே உணர்த்துகிறது. ஒவ்வொரு மூச்சுக்கும் ஒரு தடவை மந்திரம் உச்சரிக்கப்பட வேண்டும் என்ற லட்சியத்தை நினைவுபடுத்தவே இந்த 108 எண்ணிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

தியானத்தின் பலன்

 மனக்கட்டுப்பாட்டையும், மன ஒருமைப்பாட்டையும், மன அமைதியையும் பெற தியானமும், ஜபமும் பெற உதவுகின்றன. பொதுவாக இவை இரண்டும் சேர்ந்தே செல்கின்றன. இருந்தாலும் தியானம் ஆழ்ந்து செல்லும் போது ஜபம் தானாகவே நின்று விடும். மன ஒருமைப்பாடு இல்லாமல் இருந்தால் ஜபம் அதிக எண்ணிக்கையில் செய்யப்படும் போது அது அமைதியையும், மன ஒருமைப்பாட்டையும் பெற உதவும் என்று அன்னை ஸ்ரீசாரதா தேவி கூறியுள்ளார்.

 ஜபமாலை 

ஜபமாலை என்பது ஜபம் செய்யும் போது எண்ணிக்கையை கணக்கிட உதவுகிறது. கைவிரல்களால் ஜபத்தை பண்ண முடிந்தாலும், ஜப மாலையினால் செய்வது எளிது. ஜபமாலையில் மணிகள் பொதுவாக பத்து விதமான பொருட்களால் செய்யப்படுகின்றன. அவைகளில் ருத்திராட்சம், உலர்ந்த துளசித்துண்டு, தாமரை விதை, சந்தனம், ஸ்படிகம் ஆகியவை அதிகம் பயன்படுத்தப்படுபவை. இந்த மணிகள் பட்டு நூலினாலே, செம்பு, வெள்ளிக்கம்பியாலே கோர்க்கப்பட்டு ஜபமாலையாக செய்யப்படுகிறது. மணிகளின் எண்ணிக்கை 32 லிருந்து 108 வரை வேறுபட்டாலும், பொதுவாக 108 எண்ணிக்கையே உபயோகத்தில் உள்ளது. சிறிது பெரிய மணி ஒன்று இவைகளுக்கு நடுவில் இருக்கும். இது 'மேரு'என்று அழைக்கப்படுகிறது. ஜப எண்ணிக்கையின் போது விரல்கள் இதை தாண்டக்கூடாது.

குருவும் சீடனும்
 
தீட்சை தரும் குரு என்பவர் சில தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். அவர் சாஸ்திரங்களின் சாரத்தை அறிந்திருக்க வேண்டும். இறையனுபவத்தை பெற்றிருக்க வேண்டும். களங்கமற்ற, தூய்மையான வாழ்க்கையுடன், சீடனிடம் அளவற்ற கருணையை கொண்டிருக்க வேண்டும். பணிவு, முக்தியில் தீராத ஆர்வம், புலனடக்கம், சாஸ்திரங்கள் மற்றும் குருவிடம் நம்பிக்கை, கீழ்ப்படிதல் ஆகியவை சீடனுக்கு உரிய குணங்களாக இருக்க வேண்டும்.

 மந்திர தீட்சை

 தியானிப்பின் போது உச்சரிக்க மந்திரம் என்ற ஒன்று வேண்டும். மந்திரம் என்பது அதனை ஜெபம் செய்பவரை பாதுகாக்க வல்ல இறைவனின் திருநாமம். தீட்சை என்பது குரு சீடனுக்கு இந்த மந்திரத்தை அளிக்கும் முறை. இதன் மூலம் சீடனின் பாவங்கள் குறைக்கப்பட்டு அழிக்கப்பட்டு விடுகின்றன. மந்திர தீட்சை  சீடனின் உடலையும், உள்ளத்தையும் தூய்மைப்படுத்துகிறது. அவனை தியானம் செய்வதற்கு தகுதி உடையவனாக்குகிறது. தியானத்தின் முழு ஆழத்தையும் காண இறங்குபவர்கள் ஒரு குருவிடமிருந்து தீட்சை பெறும் இந்த புனிதச் சடங்கை மேற்கொள்ள வேண்டும்.

மந்திரத்தின் பகுதி.

பொதுவாக மந்திரம் என்பது நான்கு பகுதிகளைக் கொண்டிருக்கும். அவை பிரணவம் என்ற ஓம், இஷ்ட தெய்வத்தை குறிக்கும் பீஜம், இஷ்ட தெய்வத்தின் பெயர், வந்தனத்தை தெரிவிக்கும் 'நம' ஆகியவற்றின் ஒருங்கிணைந்த சொல் தான் மந்திரம்.

 தியானம் செய்யும் முறை.

 1. உங்கள் இஷ்ட தெய்வத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். அது உங்கள் குலதெய்வமாகவோ, உங்களுக்கு பிடித்த வேறு தெய்வமாகவோ இருக்கலாம்.
 
2. தியானத்திற்காக ஒரு நாளில் இரண்டு நேரங்களை தேர்வு செய்து கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக காலை 5 மணி, மாலை 7 மணி. முடிந்தவரை இதே நேரத்தில் தினமும் தியானத்தில் அமர வேண்டும்.
 
3. வீட்டின் ஒரு இடத்தை தியானத்திற்காக தேர்ந்தெடுங்கள். அது பூஜை அறையாகவே, வேறு அமைதியான இடமாகவோ இருக்கலாம். பூஜை அறை இல்லையென்றால், இஷ்ட தெய்வத்தை வைப்பதற்கு ஒரு சிறு இடத்தை ஏற்படுத்திக் கொள்ளவும்.
 
4. அங்கு ஆசனத்தை விரித்து அதில் அமரவும். தலை, கழுத்து, மற்றும் முதுகெழும்பு நேராக இருக்கும் படி பார்த்துக் கொள்ளவும். கைகள் மடி மீது இருக்கட்டும். கண்களை மூடிக் கொள்ளவும்.
 
5. சூரியன், நிலவு, நட்சத்திரங்கள், மேகங்கள் எதுவும் இல்லாத பரந்த எல்லையற்ற ஆகாயம் மங்கிய ஒளியில் இருப்பதாக சில நிமிடங்கள் கற்பனை செய்யவும். இது உங்கள் உடலையும், உள்ளத்தையும் தளர்த்தி அமைதிப்படுத்தும்.
 
6. இப்போது உங்கள் உணர்வு மையத்தை இதயத்திற்கு எடுத்துச் செல்லவும். பன்னிரண்டு இதழ்கள் கொண்ட சிவப்புத் தாமரையை அங்கு கற்பனை செய்யவும். உங்கள் இஷ்ட தெய்வம் அங்கு அமர்ந்திருப்பதாக எண்ணவும்.
 
7. இப்போது இஷ்ட தெய்வத்திடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்யவும். நல்ல உடல், அமைதியான மனம், நம்பிக்கை, பக்தி, விவேகம், பற்றின்மை ஆகியவற்றுக்காக பிரார்த்திக்கவும்.
 
8. ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் இஷ்ட தெய்வத்தை தியானிக்கவும். மனம் அங்கும் இங்கும் ஓடினாலும் அதை இழுத்து வந்து இஷ்ட தெய்வத்திடம் நிறுத்தவும்.
 
9. பின்பு இஷ்ட தெய்வத்தின் நாமத்தை ஜபம் செய்யவும். உங்கள் இஷ்ட தெய்வம் ராமராக இருந்தால் 'ராம,ராம' என்று தொடர்ந்து ஜபம் செய்யவும். குறைந்த பட்சம் 108 முறையாவது ஜபம் செய்ய வேண்டும். அதிகமாக செய்ய விரும்பினால் அது 108 ன் மடங்காக இருக்கட்டும்.
 
10. இப்போது மானசீக பூஜை செய்யலாம். சந்தனம், பூ, ஊதுபத்தி, தீபம், நைவேத்தியம் ஆகிய ஐந்து பூஜை பொருட்களால் செய்யப்படுகின்ற பூஜையாக அது இருக்கட்டும்.
 
11. முடிவாக தியானத்தின் பலன்களை இஷ்ட தெய்வத்தின் திருவடிகளில் சமர்ப்பிக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக