வெள்ளி, 7 அக்டோபர், 2016

ஜீவ சமாதி

நண்பர் ஒருவர் நேற்று என்னை சந்திக்கையில் ஒரு கேள்வியைக் கேட்டார். ஐயா, ஜீவ சமாதி என்று சொல்கிறீர்களே, அது தற்கொலை அல்லவா ? அதற்கு உடந்தையாக, சாட்சியாக இருந்தவர்கள் கொலைகாரர்கள் தானே ? உயிரோடு ஒருவரைப் புதைப்பது கொலைதானே ? என்று கேட்டார். அவரைச் சொல்லி குற்றமில்லை.

 இன்றைய நடைமுறை சட்ட திட்டங்களின்படி அது தற்கொலை என்றே கொள்ளப்படும். உயிரோடு புதைப்பவர்கள் கொலைகாரர்களே என்று தீர்ப்பு சொல்லி விடுவார்கள். ஆனால் யோகிகள், சித்தர்கள், ஞானிகள் நிலை வேறு.

நதியானது கடலில் போய் சேர்வது போன்றது யோகிகள் தன் ஜீவாத்மாவை பரமாத்மாவோடு ஐக்கிப்படுத்திக் கொள்வது. ஒரு கல்லைக் கட்டிக் கொண்டு நீரில் குதித்தாலோ, தூக்கு போட்டுக் கொண்டாலோ அல்லது வேறு ஏதாவது உபாயத்தில் தன் உயிரை துன்புறுத்தி உடலில் இருந்து வெளியேற்றுவது தற்கொலைதான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஒரு யோகியோ, சித்தரோ அவ்வாறு ஸமாதி ஆவதில்லை. ஜீவன் நீங்கிய பிறகும் அவர்கள் உடல் எப்படி அமர்ந்திருந்தார்களோ அப்படியே அமர்ந்திருந்தபடி இருக்கும். மேலும் உடலானது அழுகிப் போகாமல் அப்படியே வற்றி, சுருங்கிப் போய் இருக்கும். இது பல சந்தர்பங்களில் நிரூபணம் ஆகியுள்ளது. ஆனால் உங்களாலோ, என்னாலோ எந்த வேதனையும் இல்லாமல், அசைவும் இல்லாமல் உயிரை உடலில் இருந்து பிரித்தெடுக்க முடியாது. மூச்சை அடக்கி சிறிது நேரம் கூட அமர முடியாது. நம் உடல் நம்மையும் மீறி மூச்சு விட்டுவிடும். அப்படியே கஷ்டப்பட்டு அடக்கினாலும் அசையாமல் இருக்க முடியாது. இது மட்டுமல்ல உடலை பஞ்ச பூதங்களோடு கரைந்து போகச் செய்யவும் அவர்களால் முடியும்.

சாதாரணமாக மனிதர்கள் அவஸ்தைப்பட்டு, மலஜலம் கழிந்து வாய் வழியாகவோ, மூக்கு வழியாகவோ பிராணன் போய் மரணிப்பார்கள். ஆனால் ஜீவ ஸமாதி ஆகும் யோகியின் உடல் வாழ்க்கை முற்றுப் பெறுவது வேறு விதத்தில். நதியானது கடலில் கலப்பது போல யோகியின் ஜீவபோதமானது பரபோதமாக மாறி அமைகிறது. உடல் வாழ்க்கையோடு சம்மந்தப்பட்ட அவரின் உணர்ச்சியானது எல்லை கடந்த பேருணர்ச்சியாக விரிவடைகிறது. பொறிகளாகிய கண், மூக்கு, செவி, போன்றவற்றில் புலனாகும் உணர்ச்சிகள் ஏதும் யோகிக்கு இருக்காது. தூங்கப் போவது போல ஒவ்வொன்றாக அவைகள் தாமே ஒடுங்கிவிடுகின்றன.அந்தி வேளை வரும் போது, தன் வீட்டுக்கு பறந்து வரும் பறவை போல யோகியின் மனமானது இறுதி கட்டத்தில் ஹிருதயத்தில் அடங்கிவிடுகிறது. உடலெங்கும் சீதம் பரவுகிறது. அதாவது பிராணன் ஒவ்வொரு அவயத்தை விட்டும் மெதுவாக விலகுகிறது. பிராயாணி ஒருவன் வண்டி நிலையத்துக்கு வந்து சேருவது போல யோகியின் பிராணன் உச்சந்தலைக்கு வந்து சேருகிறது. அதனால் உச்சந்தலையில் மட்டும் நெடுநேரம் கதகதப்பு நீங்காதிருக்கும்.

அப்போது ஓம் என்ற பிரணவ ஓசை மட்டும் உள்ளே ஒலித்துக் கொண்டே இருக்கும். ஆதிநாதத்தை கேட்டபடி அதிலேயே ஒடுங்கி ஓம் என்ற ஓசையின் வடிவினனாகிய பரமாத்மாவின் திவ்ய சொரூபம், அலகிலா ஜோதி, பேரின்பம், சித் அம்பரம் என்ற நிலையை யோகி அடைவார் மேலைத்துவாரம் வழியாக ஜீவனை பரமனோடு இணைத்துக் கொள்வரர். இதுவே பிறப்பறுக்கும் மரணமிலாத பெரு வாழ்வு நிலை. இது மரணமல்ல இது ஜீவ ஐக்கியம். சரீரம் விழுந்து போகாமல் சரீரத்தின் துணை கொண்டே வீடு பேறு அடையும் நிலை


 அதல்லாமல் மரணமிலாப் பெரு வாழ்வு என்பது ஆயுளை நீட்டித்துக் கொள்வதல்ல. இந்த மரணமிலாப் பெருவாழ்வு நிலையை அடையவே சித்தர்கள் தேகத்தை வலிமையாக்கி, ஆயுளை நீட்டித்துக் கொண்டார்கள். எனவே நண்பரே ஜீவ ஸமாதி என்பது தற்கொலையோ, கொலையோ அல்ல. அது ஜீவ ஐக்கியம். இவ்வாறு ஐக்கியமானவர்கள் நினைத்த போது வரவும் முடியும் என்று சொல்லப்படுவதுணடு. அப்படி வந்து அருள்பாலித்த்துக் கொண்டும் இருக்கிறார்கள். இதைப் பற்றி இன்னும் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், சித்தர்கள் உறையும் ஜீவஸமாதியில் போய் உண்மையான மனதோடு வேண்டுங்கள், ஏதாவது ஒரு ரூபத்தில் அவர்கள் இதை உங்களுக்கு செம்மமைக விளக்கி அருளுவார்கள்.

உயிர் போகினும் போகாதுடலினை வீங்கித்
தலைகிறுத்த கல்வது தனஞ்செயன்.

பிராணனைக் கட்டுப்படுத்த வல்லவர்களுக்கு இந்த தனஞ்செயன் வாயுவை மற்ற ஒன்பது பிராணன்களில் இருந்து பிரியாமல் இருக்க வைத்து நீண்டநாள் தன் ஆயுளை நீட்டித்துக் கொள்ள முடியும். பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்வது சாத்திமா ? என்று கேட்டால் திருமூலர் சாத்தியமே என்கிறார்.

ஒத்த இவ்வொன்பது வாயுவும் ஒத்தன
ஒத்த இவ்வொன்பதின் மிக்க தனஞ்செயன்
ஒத்து இவ்வொன்பதில் ஒக்க இருந்திட
ஒத்த உடலும் உயிரும் இருந்தவே.

பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த யோகியர் பிராணாயாமப் பயிற்சியின் வல்லமையால் இந்த தனஞ்செயன் என்கிற பத்தாவது பிராணனை மற்ற பிராணன்களில் இருந்து பிரியாமல் செய்து உடலையும், உயிரையும் காத்துக் கொண்டனர். திருமூலர் 4500 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்ததாகச் சொல்வார்கள். அகத்தியரோ பல யுகங்களாக வாழ்வதாகச் சொல்வது உண்டு. அகத்தியர் ஒருவரல்ல பல பேர்கள் இருந்திருக்கிறார்கள் என்றும் வாதிடுவோர் உண்டு.

ஆனால் இந்த திருமந்திரப் பாடலைப் படித்தால் அது சாத்தியமே என்று தோன்றுகிறது.

இந்த தனஞ்செயன் வாயுவானது உயிர் போனாலும் உடலை விட்டுப் போகாமல் மூன்று நாட்கள் வரை தங்கி இருந்து பின் உடலை வீங்கச் செய்து கபாலம் வழியாக வெளியேறும் என்பது சித்தர்கள் கூற்று. இவ்வாயுவானது உடலைவிட்டு வெளியேறி விட்டால் உடலானது உடனே வீங்கி வெடித்து விடும்.

இருக்கும் தனஞ்செயன் ஒன்பது காலில்
இருக்கும் இருநூற்று இருபத்து மூன்றாய்
இருக்கும் உடலில் இருந்தில ஆகில்
இருக்கும் உடலது வீங்கி வெடித்ததே.

இந்த தனஞ்செயன் என்கிற வாயுமட்டும் மரணத்திற்குப் பிறகு மூன்று நாட்கள் இருப்பது ஏன் ? அதாவது இந்த தனஞ்செயனானது இடகலை, பிங்கலை, சிகுவை, அத்தி, அலம்புடை, புருடன், காந்தாரி, சங்கிணி, குரு ஆகிய ஒன்பது நாடிகளிலும் பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகன், தேவதத்தன் என்கிற ஒன்பது பிராணன்களுடன் கூடிஇருக்கும். அப்படி கூடி இருக்கும் வரைதான் உயிர் இருக்கும். இது பிரிந்து செயல்படும் இடத்தை நாற்சந்தி என்பார்கள். வயிரவன், முக்கியன், அந்தர்யாமி, பிரவஞ்சனன் என்ற இந்த நாற்சந்திகளில் அந்தர்யாமி பிராணவாயுவை உடலினுள்ளேயும், இரத்தத்தினுள்ளேயும் உருவாக்கிக் கொண்டே இருப்பதால்தான் இந்த தனஞ்செயன் வாயுவானது உடலில் தங்கிவிடுகிறது. இதைப் பயன்படுத்தி சித்தர்கள் இறந்ததாகக் கருதப்படும் உடலில் பிராணவாயுவை அதிகரிக்கச் செய்து உயிர் பெற்று ஏழ வைத்துவிடுவார்கள். இதனால்தான் இறந்தவர்களை புதைக்கச் சொல்கிறார்கள்.

சாதாரணமான மனிதர்களுக்கு புதைத்த உடலில் இருந்து எவ்வித துன்பமும் இல்லாமல் தனஞ்செயன் வெளியறிவிடும். ஆனால் எரியூட்டப்படும் உடலில் இருந்து தனஞ்செயன் வேதனையுடனும் வலியுடனும் டப் என்ற சத்தத்துடன் மண்டையை உடைத்துக் கொண்டு வெளியேறும். மேலும் ஞானிகளின் சமாதி நிலையை மரணம் என்று எண்ணி அவர்கள் தேகத்தை எரித்துவிடக் கூடும், என்று கருதியே வள்ளலார் எரியூட்டுவதைக் கடுமையாக எதிர்த்தார். எரிப்பது என்பது கொலைக்குச் சமம் என்கிறார்.  

வேலூருக்கருகே வள்ளிமலை கோவிலில் திருப்பணி வேலைகள் நடந்து கொண்டிருந்த போது, உடைந்திருந்த படிக்கல்லை எடுத்து விட்டு, புதுப் படிக்கல் போடுவதற்காக உடைந்த படிக்கல்லை நகர்த்திய போது, உள்ளே சித்தர் ஒருவரின் அமர்ந்த திருக்கோலத்தைத் தான் கண்டதாக திரு முருக கிருபானந்த வாரியார் சொல்லியிருக்கிறார். யோகியர் தேகத்தை மண்கூடத் தீண்டாது. கேசரி, லம்பிகா யோகத்தில் அப்படி அமர்ந்திருப்பவர்களை விபரம் தெரிந்தவர்கள் எழுப்பி விடமுடியும். அந்த இடத்தில் இது குறித்த விபரம் தெரிந்தவர்கள் யாரும் இல்லையெனில் மீண்டும் புதைத்து விடுவார்கள். அப்படி லம்பிகா யோகத்தில் அமர்ந்திருப்பவர்கள் இறந்தவர்கள் போலத்தான் காணப்படுவார்கள். அவர்கள் உடல் எத்தனை யுகங்களானாலும் பூச்சிகள் மற்றும் இயற்கை சீற்றங்களால் அன்றி வேறெதாலும் அழியாமல் அப்படியே இருக்கும்.  

அவர்கள் வாயை பக்குவமாகத் திறந்து உள்ளே உள்நாக்குப் பகுதியை அடைத்திருக்கும் நாக்கை மெதுவாக எடுத்துவிட்டு, மெதுவாக கைகால்களை நீட்டி படுக்க வைத்து, மிகவும் மெதுவாக கை கால்களைத் தேய்த்து இரத்த ஓட்டம் வரச் செய்தோமானால், அவர்களுக்கு மூச்சு வந்துவிடும். ஆனால் கண்களைத் திறந்து நம் மீது கோபித்துக் கொள்ளவும் கூடும்


ப்ரம்ம(பரம) இரகசியம்.

எது இரகசியம் ? பிறரிடத்தில் பகரப்படாதது இரகசியம். பேசாமலேயே இருந்தால் ஒன்றும் பகரப்படுவதில்லை. ஆக மௌனம் இரகசியத்தை நன்கு காக்கிறது என்பது புலனாகிறது. மௌனம் எத்தன்மையுடையது ? சப்தம் செய்யாமல் இருப்பது மௌனம். பூரண அமைதியே அதன் தன்மை. எது அசைகிறதோ அது சப்தம் செய்கிறது. பிரகிருதி முழுவதும் அசைகிறது. எனவே பிரகிருதியினிடத்தில் அமைதியில்லை. அதனால் அதனிடம் மௌனமில்லை. ஆனால் மனம் அடங்க அடங்க அது மௌனத்தில் நிலை பெறுகிறது. முற்றிலும் மனம் அடங்கி, ஒடுங்கினால் என்ன ...டக்கும் ? ஆன்ம சொரூபம் மட்டுமே எஞ்சி நிற்கும். இந்த ஆன்மா அசையாதது. அதில் சப்தமில்லை. எனவே ஆன்மா மௌன சொரூபமாகும். மேலும் இந்த ஆன்மாவை இன்னதென்று வாய்விட்டுப் பேசி விளக்கிவிட முடியாது. எது விளக்கத்துக்கு வரவில்லையோ அது இரகசியமாகும். ஆகையால் இரகசியங்களுள் முடிவானது மௌனம் அல்லது ஆன்மாவாகும்.


இந்த ஆன்மா பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம். நமக்கு ஐந்து வகையான சரீரங்கள் உண்டு. அவை 1. அன்னமய கோசம், 2. பிராணமய கோசம், 3. மனோமய கோசம், 4. விஞ்ஞானமய கோசம், 5. ஆனந்தமய கோசம் என்பனவாம். அதைப் போல ஐந்து அவஸ்தைகளும் உண்டு. அவற்றை உபாதிகள் என்றும் கூறுவார்கள். அவை 1. நனவு, 2. கனவு, 3. உறக்கம், 4. பேருறக்கம், 5. உயிர்படக்கம் என்பவைகளாம். இந்த ஐந்து அவத்தைகளும் நம் உடலில் அன்றாடம் ஏறியும், இறங்கியும் வருவதை நாம் உள் முகமாக கூர்ந்து கவனித்தால்,உணரலாம்.

நம் உயிரானது அன்னமய கோசம் என்ற பரு உடம்பைப் பற்றித் தொழிற்பட்டு வினைப்பயனை நுகரும் நிலையே நனவு அல்லது சாக்கிரம் எனப்படும். அதைவிட்டுப் பிராணமய கோசம் என்கிற சூக்கும சரீரத்தைப் பற்றி நினைவுணர்வுகளோடு கூடி, சூக்கும வினைப் பயன்களை நுகரும் நிலை கனவு அல்லது சொப்பனம் எனப்படும். அவ்விரண்டையும் விட்டு மனோமய கோசம் என்கிற சித்தத்தைப் பற்றி நின்று முந்தைய வியாபாரங்களிலிருந்து நீங்கி ஒடுக்கமுறும் நிலை உறக்கம் அல்லது சுழுத்தி எனப்படும். இந்த மூன்றையும் விட்டு விஞ்ஞானமய கோசம் எனப்படும் கஞ்சுக சரீரத்தைப் பற்றி, அறிவு நிகழ்ச்சி சிறிதும் இன்றி உயிர்ப்பு முதலிய செயல்களை மாத்திரம் உடையதாய் நிற்கும் நிலை பேருறக்கம் அல்லது துரியம் எனப்படும். இனிக் கஞ்சுக சரீரத்தின் தொழிற்பாடும் நிகழாமல்ஆனந்தமய கோசம் எனப்படும் காரிய மாயையின் செயல் ஒன்றே நிகழப் பெற்று உயிர்ப்பும் அடங்கி நிற்கும் நிலை உயிர்ப்படக்கம் அல்லது துரியாதீதம் எனப்படும்.

இப்படி அசுத்த மாயை காரியங்களாகிய ஐங்கோசங்களை பற்றி, அவ்வவற்றால் விளங்கும் உணர்வுகளையே தன் இயல்பாகக் கொண்டு விளங்கி, அவத்தை வேறுபாடு அடைவதாய், இவ்வைங் கோசங்களுக்கும் அப்பாற்பட்டதாய் உள்ள தன்னோக்கு உணர்வே ''ஆன்மா'' எனப்பட்டது. எனவே ஆன்ம தத்துவங்கள் இருபத்தி நான்கும், வித்யா தத்துவங்கள் ஏழும் கூடிய ஐங்கோசங்களையும் கடந்து, சிவ தத்துவம் ஐந்தையும் உணர்ந்து, கடந்தால் மட்டுமே ஆன்மாவை உணர முடியும். இதுவே தன்னை உணர்தல் ஆகும்.

தத் என்றால் அது. துவம் என்றால் தன்மை. அதாவது தன் தன்மை மாறாதது தத்துவம். அதாவது படைப்பு காலம் முதல் ஊழிக்காலம் வரை தன் தன்மை மாறாது நிலைத்து நிற்கும் பொருள்கள் தத்துவங்கள். மேலே கூறிய மூவகை தத்துவங்களின் செயலே உயிர்களை உலக போகத்தில் அழுந்துப்படி செய்வது. எனவே இந்தத் தத்துவங்களை உணர்ந்தவன் அதைக் கடந்து ஆன்மாவைக் கண்டு கொள்வான்.